search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை நீர்"

    திருமங்கலம் அருகே வைகை நீரை பங்கிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சில ஆண்டுகளாக வற்றிக்கிடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் கம்பிக்குடி கால்வாய் மூலமாக திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு வந்தடையும்.

    இந்த கண்மாய் நிரம்பிய பின் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி, சின்னஉலகாணி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண் மாய்களுக்கு செல்லும்.

    இதன்மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி, பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. அந்த கண்மாயும் தற்போது நிரம்பியதால் உபரி நீர் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது.

    ஆனால் இந்த கிராமங்களுக்கு தண்ணீரை சமமாக பங்கீடு செய்யவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். நேற்று ஓ.ஆலங்குளத்துக்கு மட்டும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், விருசங்குளத்துக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி, அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.ஆலங்குளத்துக்கு செல்லும் தண்ணீரை பெரிய ஆலங்குளம் கிராம மக்கள் இன்று மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் ஓ.ஆலங்குளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது.

    இதை கண்டித்து இன்று காலை ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த 100-க்கும மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரிய ஆலங்குளத்தில் இருந்து சரிசமமாக மற்ற ஊர்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    கம்பிக்குடி கால்வாய் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக கிராம மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில்தான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சிலர் தன்னிச்சையாகவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து கண்டுகொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ×